Tuesday, January 17, 2017

"அவள் அப்படித்தான்" (ருத்ரைய்யா எனும் தமிழ் சினிமா இயக்குனர்)

தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான பல்வேறு விமர்சனங்களைத் தன்னகத்தே கொண்டு தமிழ்ரசிகர்களை ஆட்டம் காண வைத்து  இன்று கூட விடை காண முடியாத ஒரு யதார்த்தமான,புதுமையான படைப்பே சி.ருத்ரய்யாவின் "அவள் அப்படித்தான்"திரைப்படம்.ஒற்றைத்திரைப்படத்துக்காக,தமிழ் சினிமாவின் வரலாற்றுப்பக்கங்களில் விமர்சகர்களாலும் நல்ல படைப்பை எதிர்பார்ப்பவர்களாலும் இன்று வரை நினைவுகூர வைத்த பெருமை சி.ருத்ரய்யா அவர்களையே சாரும்.


1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் கறுப்பு வெள்ளையில் வெளியான இத்திரைப்படம் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்துச்செல்லும் படைப்பு என்றே கூறலாம்.இத்திரைப்படம் எழுந்த காலகட்டத்தையும் பின்னணியையும் வைத்து நோக்கும் போது இத்திரைப்படத்திலுள்ள குறைகளையும் போதாமைகளையும் தாண்டி இது ஒரு மிகச்சிறந்த படைப்பு என்பதில் துளியளவும் எவரும் சந்தேகிக்க இயலாது.


இத்திரைப்படத்தில் அந்தக்காலத்திலேயே மிகவும் புகழப்பட்டு பிரசித்தி பெற்ற மூன்று நட்ச்சத்திரங்களான ரஜனிகாந்த்,கமலஹாசன்,ஸ்ரீப்ரியாவைக்கொண்டு உருவாக்கப்பட்டது.அந்த வகையில் மஞ்சு (ஸ்ரீப்ரியா) எனப்படும் கதாப்பாத்திரம்தான் பிரத்தியேகமான தனித்தன்மையுடன் தமிழ் சினிமாவில் யதார்த்தமாக  உருவாக்கப்பட்ட முதல் பெண் கதாநாயகி என்று கூறலாம்.அதுவரைகாலமும் கவர்ச்சி பொம்மையாக நடிக்கப்பயன்படுத்தப்பட்ட  ஸ்ரீப்ரியா எனும் நடிகையின் இயல்பான,திறமையான நடிப்பை இப்படத்திற்கு முன்னும் பின்னும் எவரும் முழுமையாக பயன்படுத்தவில்லை.இதிலிருந்தே சி.ருத்ரய்யா அவர்களின் கதாபாத்திரங்களைக் கையாளும் திறனைக்கண்டு கொள்ள முடியும்.


அவள் அப்படித்தான் திரைக்கதையை நோக்கினால்,மஞ்சு எனப்படுகின்ற ஒரு பெண், தாயின் தவறான ஆண்களுடனான பாலியல் தொடர்புகளைக்கண்டும்,ஆண்களின் தொடர்ச்சியான ஆணாதிக்கம் மற்றும் கயமைத்தனங்களால் உளவியல் மற்றும் உடலியல் ரீதியாக பாதிக்கப்பட்டும், சமூகத்தில் உள்ள ஆண்களின் மீதும், குடும்ப உறவுகளின் மீதும் நம்பிக்கையற்ற தன்மை,வெறுப்புணர்ச்சி மேலோங்கி  காணப்படுகின்ற ஒரு புரிந்து கொள்ள முடியாத  இயல்பானவளின் வாழ்க்கை கதை என்றே கூறலாம்.சுருக்கமாக கூறின் படத்தின் மையக்கரு மஞ்சுவின் உளவியல் வெளிப்பாடே.நம்பிக்கைதான் உண்மை நிலையை உருவாக்குகின்றது என்பதற்கிணங்க ஒரு உறவின் மீது நம்பிக்கை ஏற்படும் போது அவள் பிறக்கிறாள்;மேலும் அதே நம்பிக்கை ஏமாற்றப்பட்டு உடைந்து போகும் போது அவள் இறக்கிறாள் இதனையே ஒரு கவியாக படத்தின் இறுதியில் கூறப்படுகிறது "அவள் பிறப்பாள் இறப்பாள்,இறப்பாள் பிறப்பாள் அவள் அப்படித்தான்"எனும் இறுதி வரியுடன் படம் முற்றுப்பெறுகிறது.




இப்படத்தின் சிறப்பம்சங்களை சொல்லப்போனால்,கமல்ஹாசன், ரஜனி இருவரும் அக்காலகடடத்தில் பிரபல்யமான கதாபாத்திரமாக இருந்த போதும் படத்தின் கதையின் தன்மை உணர்ந்து  எந்த ஒரு நிலையிலும் தங்களது சுய ஆதிக்கம் வெளிப்படாமல் யதார்த்தமாக
​நடித்துள்ளனர்.

ரஜனி-யதார்த்தமான ஆண்களின் நிலையை விளக்குவதாகவும் பழமையில் இருந்து மாறாத ஒரு ஆணாகவும் பெண்களை ரசிக்கும் ஆராதிக்கும் ஆணாக இருந்தாலும்கூட  வன்முறையில் பெண்ணை அடைய விரும்பாத ஒரு சாதாரண ஆண்.

கமல்-பெண்களுக்கு சார்பாக,பெண் விடுதலைக்காக முயற்சிக்கும் ஆவணப்படங்களை உருவாக்கும் ஒரு புதுமையான நபர்.மஞ்சுவின் வித்தியாசங்களால் கவரப்படடவர். இவ்வாறாக திரைப்படக்கதாபாத்திரங்கள் யதார்த்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் இத்திரைப்படம் பதிலடி கொடுக்கும் வகையில் வித்தியாசமான வசனங்கள்,நுனி நாக்கில் ஆங்கிலம்,அதுவும் பச்சையாக,தமிழில் கூட பச்சையாக வார்த்தைப்பிரயோகம்,இசைஞ்ஞானி இளையராஜாவின் இசை இவ்வாறானவற்றை உள்ளடக்கி இத்திரைப்படம் அமைந்துள்ளது

இத்திரைப்படம் முழுக்க முழுக்க பெண்ணியம்,பெண்சுதந்திரம்,ஆணாதிக்கம்,சமூக கண்ணோட்டம்,பெண் பற்றிய சமூக விமர்சனங்களைப்பற்றியும் திடீர் திடீர் என யதார்த்தமாக பேசி விடுகிறது.அவற்றில் சிலவற்றை அடையாளப்படுத்தலாம்.பெண்கள் வேலைக்குச்செல்லல்,முஸ்லீம் பெண்களின் ஆடை நிலை,குடும்பக்கட்டுப்பாடு,திருமணத்திற்கு முன் உடலுறவு,கருக்கலைப்பு ,பெண்கள் கல்வி நிலை,ஆண்கள் பல திருமணம் முடித்தல்,பெண்களின் ஆடை நிலை,நடிகைகள் பற்றிய சமூகத்தின் நிலை.

"அவள் அப்படித்தான" திரைப்படத்துக்கு முதலில் அங்கீகாரமே கிடைக்கவில்லையாம்.தமிழ் திரையுலமும் ரசிகர்களும் எப்போதுமே திறமை சாலிகளை எப்போதுமே அடையாளம் கண்டு கொள்ள மாடடார்கள் என்பதற்கு இப்படத்தின் இயக்குனர் ருத்ரைய்யா ஒரு எடுத்துக்காட்டு.ருத்ரைய்யாவின் கதையை கேட்டு அவரது திறமையை புரிந்து கொண்ட கமலஹாசன்,அவரே முழுவதும் பொறுப்பெடுத்து முன்னின்று ரஜனிகாந்த்,ஸ்ரீப்ரியா,இளையராஜா ஆகியோரைத்தெரிவு செய்து படத்தில் பணி புரிய வைத்துள்ளார்.எப்போதெல்லாம் ஓய்வாக இருப்பார்களோ அந்த சந்தர்ப்பங்களில் படப்பிடிப்புகள் நடை பெற்றது.கமலஹாசன் வீடு,ஸ்ரீப்ரியா வீடு,தயாரிப்பு அலுவலகம் ஆகிய இடங்களில் மட்டுமே படப்பிடிப்புகள் நடை பெற்றன.இப்படக்கூட்டணி நடித்த "இளமை ஊஞ்சலாடுது" திரைப்படம் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்றதனால் இப்படமும் நல்ல விலைக்கு விற்கப்பட்டது.படம் முடிந்து தியேட்டரில் திரையிட்ட போது ரசிகர்கள் பயங்கரமாக கத்தி கூச்சல் போட்டு ரகளை செய்திருக்கிறார்கள்.படத்தை தியேட்டரை விட்டே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாம்.படத்திற்கு மார்க் போடும் கூட்டம் கூட குறைவான மார்க்குகளைப்போட்டு படத்தை புறக்கணித்ததாம்.இது இவ்வாறிருக்க இந்திய திரை உலகின் மேதைகளுள் ஒருவரான "மிருணாள்சென்"ஒரு வேலையாக சென்னை வந்தபோது யதேர்ச்சையாக அவள் அப்படித்தான் படம் பார்த்திருக்கிறார்.இப்படிப்பட்ட ஒரு அருமையான படத்தை தமிழ் ரசிகர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கத்துடன் அவரே பத்திரிகையாளர்களை அழைத்து படத்தின் பெருமைகளையும் சிறப்புக்களையும் கூறியிருக்கிறார்.அதன் பின்னர்தான் பத்திரிகைகளும் அவற்றைப்பாராட்டி வெளியிட்ட பின்னர் படம் நல்ல வரவேற்பைப்பெற்றதுடன்  ஓட ஆரம்பித்தது.இந்தியாவின் பல இடங்களில் நூறு நாட்களுக்கு மேல் இந்த படம் ஓடியுள்ளது.ஒரு சிறந்த தமிழ் இயக்குனர் திறமை பற்றி எங்கிருந்தோ வந்த ஒருவர் கூறித்தான் அவரைப்பற்றி தெரிந்து கொள்ளப்பட்டுள்ளது.அதே நிலைதான் தற்காலத்திலும் தொடர்கின்றது என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். 




ருத்ரைய்யா அவர்களின் இரண்டாவது படமான "கிராமத்து அத்தியாயம்"சரியாக பேசப்படவில்லை என்றாலும் அவரின் ஒரே ஒரு படைப்பே போதும் தமிழ் திரையுலகம் அவரது படைப்பை  காலங்காலமாக போற்றி துதி பாடிட. 

- அத்தியா -

2 comments: